உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு சிறப்புக் குழு நாளை டெல்லியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளனர்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க உருவாக்கப்பட்ட தமிழக குழு நாளை(மார்ச்.05) காலை 11 மணிக்கு டெல்லியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.