உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது அகில இந்திய அளவில் வணிகம் செய்வதில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.
உலக புகழ்பெற்ற தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் வந்து செல்போன் உற்பத்தியை தொடங்குவது பெருமை அளிக்கிறது. தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் பல தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். புதிய தொழிற்சாலை மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பெகாட்ரான் நிறுவனம் பல நாடுகளில் தொழிற்சாலைகளை தொடங்கி பலருக்கு வேலை வழங்கி வருகிறது. பெகாட்ரான் நிறுவனம் ரூ.1200 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை தொடங்கி உள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் வேலை வழங்கப்படும் என்று பெகாட்ரான் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் அவர் பேசுகையில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வேண்டும் என கூறினார்.