விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளதாகவும் தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும் என தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13ஆம் தேதி விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுநர் தவிர்த்திருப்பதாகவும் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயல் என தெர்வித்துள்ளார்
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தபோது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது எனவும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை எனவும் ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.