சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதில் உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் வரிசையில் துரை முருகன், ஐ.பெரியசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார்.
அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரலை பட்டியலிட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்.
பின்னர் ஒவ்வொன்றுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் பல்வேறு தொழில் கொள்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை அடுத்த வாரம் 9-ந்தேதி கூடும் நிலையில் அரசின் திட்டங்கள், புதிய கொள்கை முடிவுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள், அரசின் நிலைப்பாடுகள் சட்டசபையில் கவர்னர் உரையில் இடம்பெறும் என்பதால் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Discussion about this post