யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களையும், வீடியோக்களையும் யூடியூபர் சாட்டை துரைமுருகன் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மீண்டும் தமிழக முதல்வர் குறித்து யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறாக வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, யூடியூபர் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். நிபந்தனையை மீறி செயல்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.
யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை. நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமனம் செய்த வழக்கறிஞர் ராம கிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’, என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.