கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக 116 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முதலாவது குற்றவாளி யுவராஜ்-க்கு 3 ஆயுள் சிறை தண்டனை, சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் 2வது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய ஐவருக்கும் 2 ஆயுள் தண்டனை, பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.