தமிழகம், விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது என, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு சர்பிங் அசோசியேஷன், இந்திய சர்பிங் பெடரேஷன் சார்பில் சர்வதேச சர்பிங் ஓபன் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. ஆக.20 வரை கோவளம், மாமல்லபுரம் கடல் பகுதியில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா கோவளம் கடற்கரையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சர்பிங் அசோசியஷேன் தலைவர் அருண் வாசு தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர், பல்வேறு துறைகளில் வளமான பாரம்பரியத்தை வளர்த்து வருகிற தமிழ்நாடு. தற்போது விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஹாக்கி, கபடி, கிரிக்கெட், டென்னிஸ், ஸ்குவாஷ், கைப்பந்து, வாள் வீச்சு, சதுரங்கம் ஆகியவற்றில் தமிழ்நாடு வீரர்கள் தங்களது திறமைகளை இந்திய அளவிலும், உலக அளவிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றான சர்பிங் தற்போது இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. அதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த போட்டிகளை நடத்த ரூ.2 கோடியே 68 லட்சம் வழங்கி உள்ளோம். இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த 56 சர்வதேச வீரர்கள், 18 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள், 5 வீராங்கனைகள் அடங்குவர். இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோர் ஒலிம்பிக்சில் பங்கேற்று பதக்கம் வெல்ல வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.