கொடியசைவுடன் தொடங்கிய மூத்த குடிமக்களின் ஆன்மிக பயணம்..
முருகனின் அறுபடை வீடுகளான திச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆன்மீக பயணம் உரிய வசதிகள் செய்து கொடுத்து அழைத்துச் செல்லப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சுவாமிமலை முருகன் கோயிலிலிருந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 204 பேரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட மொத்தம் 236 பேர், 6 பேருந்துகளுடன் முருகனின் அறுபடை வீடுகளுக்கான ஆன்மிக சுற்றுலா இன்று தொடங்கப்பட்டது.
கொடியசைத்து புறப்பட்ட இந்தப் பேருந்து, முதலில் திருத்தணி சென்றடைந்து, அங்கு இரவு தங்கி, காலையில் திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகு, பழனி சென்றடையும்.
பின்னர் 9 ஆம் தேதி காலை அங்கு தரிசனம் முடித்து விட்டு, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை கோயில்களுக்குச் சென்று விட்டு, திருச்செந்தூர் சென்றடையும். 10-ம் தேதி காலை அங்குத் தரிசனம் முடித்து விட்டு, அன்று மாலை மீண்டும் சுவாமிமலை வந்து சேரும் எனக் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்