திருப்பூரில் தொடர் செயின் பறிப்பு… ஈடுப்பட்ட இரண்டு பேர் கைது!!
திருப்பூர் தாராபுரம் சாலை ஷெரீப் காலனி அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னமணி வயது 48.
இவர் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கெம்பை நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அன்ன மணி பணிகளை முடித்துவிட்டு கெம்பை நகர் பகுதியில் இருந்து திருப்பூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் வந்து தன்னுடைய வீட்டுக்கு செல்வதற்காக ஷெரிஃப் காலனி குறிஞ்சி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அன்ன மணி கழுத்தில் அணிந்திருந்த மூணரைப் பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்று கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர்.
அதனைத் தொடர்ந்து அன்ன மணி நடந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து அன்ன மணி அளித்த புகாரின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்மணியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் தாராபுரம் சாலை சந்திராபுரம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஒருவரது பெயர் மணிமாறன் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் மற்றொரு பெயர் சரவணகுமார் இவர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த 30 ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அன்னமணியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றதும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவர்களிடம் இருந்த மூன்று பவுன் பங்குச் சங்கிலி மீட்கப்பட்டது.
-பவானி கார்த்திக்