மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும்29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த சூழலில் மார்ச் 28, 29 ஆகிய நாட்களில் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்தின் போது , போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என்றும் , அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, மின்சார வாரிய துறையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என அறிவித்துள்ளது. அதன்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.