ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் புறக்கணித்தன.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 29 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.இந்த போரின் காரணமாக உக்ரைனின் வாழ்வாதாரம் முற்றிலுமாக மாறியுள்ளது. சுமார் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் போலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது. ரஷ்யா கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 2 வாக்குகள்(ரஷ்யா, சீனா) மட்டுமே பதிவாகின. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் தீர்மானத்தை புறக்கணித்தன. இதனால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.