உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளன என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் ஸபோரிச்ஸியா என்பிபி என்று அழைக்கப்படும் 6 உலைகளை கொண்ட அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் தாக்கியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், உக்ரைன் லிவிவ் நகரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் காயம் அடைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளது.
மேலும், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு அழைத்து வரப்படும் மாணவர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.