குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் மீது விழுந்த பாறை… 5 பேர் படுகாயம்..!
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டி உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ள நிலையில் குற்றால மெயின் அருவியில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஆக.22) மாலை மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது அருவியில் பகுதிக்கு மேல் உள்ள பாறை விழுந்ததில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பிஜூ (44), ஜமால் (56), புளியங்குடி பகுதியைச் சேர்ந்த உதுமான்மைதீன் (58), அருண்குமார்(27) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும் இதனை கண்ட அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தகவறிந்து வந்த குற்றாலம் போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் தீயணைப்பு துறையினரை வரவழைத்த போலீசார் மலைப்பகுதியில் இருந்து வந்த பாறைகள் ஏதேனும் மரக்கிளையில் தங்கி உள்ளதா என்பது குறித்தும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்காலிகமாக அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்