“ரிச் பேண்டு கையில் கட்டப்படும்” – பெண் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு புதிய நடைமுறை?
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், இரவு பணியில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் உள்ள பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை, கேள்விக்குறியாக்கியது. இவ்வாறு இருக்க, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, பெண் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மருத்துவமனை வளாகத்தில், 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், வேலை செய்யாத சில கேமராக்களை சரி செய்யவும், கேமரா இல்லாத சில இடங்களில், புதிய கேமராக்களை அமைக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, நோயாளிகளை கவனித்துக்கொள்பவர்களுக்கு, தனியாக பாஸ் வழங்கும் நடைமுறை தற்போது உள்ளது. பாஸ் இருந்தால் மட்டும் தான், மருத்துவமனையின் உள்ளே நுழைய முடியும்.
வரும் காலங்களில், கையில் பேண்ட் போடும் திட்டம் கொண்டு வருவதற்கு, ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
-பவானி கார்த்திக்