ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் கடந்த 16-ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் வேலூர் மாவட்டம் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இனி ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆட்டோக்களின் பின்புறம் ஓட்டுனரின் ஐடி நம்பர் ,உரிமையாளர் பெயர்,போன் நம்பர்,முகவரி ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும்,இக்கட்டுப்பாடுகளை மீறும் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.