11 ஆம் வகுப்பு மாணவனை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்ட ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு சிறுவன் ஒருவன் விளையாடுவதற்காக வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். மாணவன் குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர்.
இதையடுத்து, மாணவன் எங்கு தேடியும் கிடைக்காததால் அவனது பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியை பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து போலீசார் சோதனை செய்த போது,திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள தோழி வீட்டிலிருந்த ஆசிரியை சர்மிளாவை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து, அங்கு சென்ற துறையூர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரியையும் மாணவனும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டதும், அதன் பின்னர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியை சர்மிளாவின் தோழி வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆசிரியை சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி மகிளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியை சர்மிளா, பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவன் திருச்சியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.