இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2016ம் ஆண்டு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே கருப்பு பக்கமாக கருதப்பட்ட மோடியின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் மாதக்கணக்கில் ஏடிஎம் மற்றும் வங்கி வாசலில் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய்க்குப் பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தது. இந்த தாள் மிகவும் பாதுகாப்பானது என்றும், கள்ளநோட்டாக இதனை அச்சிடவே முடியாது என்றும் மத்திய அரசு கூறியது. ஆனால் இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய ரூபாய் நோட்டு வெளியான சில நாட்களிலேயே கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கொடுமைகள் எல்லாம் போதாது என்பது போல், கடந்த சில மாதங்களாக 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைய ஆரம்பித்தது. இந்த நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், கடந்த ஆண்டு முதலே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் போதியளவில் புழக்கத்தில் இல்லாமல் காணப்பட்டது. மேலும். இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பதை 2019ம் ஆண்டே நிறுத்திவிட்டதாக கூறினர். இந்த சூழலில்தான் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,” இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையின்படி, ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 2 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகள் தற்போது செல்லுபடியாகும். மே 23-ந் தேதி முதல் எந்த வங்கியிலும் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை மற்ற வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post