வீட்டின் அருகே தலித் மக்கள் இருப்பதை பொறுத்துக் கொள்ளாத ஆதிக்க சாதிய குடும்பத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த விடதிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 42). இவரது மனைவி ராசாத்தி (வயது 29). இந்த தம்பதிக்கு 8 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில் இளங்கோவின் குடும்பமும் ஒன்று. இவரது வீட்டிற்கு அருகே வடிவேலு (வயது 45) என்பவரும் வசித்து வந்து உள்ளார். ஆதிக்க சாதியை சேர்ந்த இவர், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவின் குடும்பத்தினரை தொடர்ந்து சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
#Casteattrocity #Thread #Groundreport #Read & #RT
An #SC family from #Manpparai
couldn't go to their own house for the past 3 days fearing safety for life. Despite filing a police complaint, the local PS are reluctant to file an FIR till date. @xpresstn (1/11) pic.twitter.com/I9DlS2pHlb— Iniya Nandan (@Iniyanandan25) October 14, 2023
வடிவேலு 8 நாய்களை வளர்த்து வந்து உள்ளார். அவை இளங்கோவின் 6 வயது மகனை விரட்டிச் சென்று உள்ளன. அப்போது கீழே விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தாய் ராசாத்தி, வடிவேலுவின் மனைவி அழகுமணியிடம் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அழகுமணி, ராசாத்தியை சாதி பெயரை சொல்லி திட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது. மற்றொரு நாள், வடிவேலுவின் 12 வயது மகன் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தங்கள் மகனின் மீது ஊற்றிவிட்டதாக இளங்கோ தெரிவித்து உள்ளார். இதுக்குறித்து ராசாத்தி கூறுகையில், “கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நான் விறகு எடுப்பதற்காக சென்றபோது அழகுமணி தண்ணீர் குழாயால் என்னை தாக்கி வயிற்றில் உதைந்தார். பஸ் ஸ்டாண்ட் செல்லும் வரை என்னை விரட்டி வந்து தாக்கினார். நான் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 8 ஆம் தேதி வீடு திரும்பினேன்.” என்றார்.
இது தொடர்பாக இளங்கோ மணப்பாறை காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால் அக்டோபர் 11 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு அடுத்த நாளே இளங்கோ வீட்டில் குடும்பத்தோடு இருந்தபோது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளனர். போலீசார் அங்கு வந்து புகைப்படம் எடுத்து சென்று உள்ளார்கள். ஆனாலும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை என தலித் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதனை அடுத்து தங்களின் பாதுகாப்பு கருதி 15 கிமீ தொலைவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று தங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மணப்பாறை காவல் நிலையத்தில் இருந்து தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் பேசிய அதிகாரி வடிவேலுவின் குடும்பத்துடன் சமாதானமாக செல்லுமாறு சமரசம் பேசியதாக இளங்கோ கூறுகிறார். ஆனால், தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை வடிவேலு மறுத்து உள்ளார். அதே சமயம், இளங்கோ வீட்டில் கற்கள் வீசப்பட்டதை தமிழ்செல்வி என்ற அண்டைவீட்டு பெண் உறுதிபடுத்தி உள்ளார். ஆனால், யார் கல் வீசியது என்று தங்களுக்கு தெரியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.