ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அபிஷேக பூஜை செய்த தீவிர ரசிகர்..!
ரஜினிகாந்த் 74 வது பிறந்த நாளில் அவருக்கு கோவில் அமைத்து சிலைக்கு 8 வித வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் மதுரை திருமங்கலத்தில் ரஜினி தீவிர ரசிகரான முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் நடத்தினார். அவரது குடும்பத்தினருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
ரஜினிகாந்த் 74-வது பிறந்த நாளையொட்டி முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் தனது அபிமான நடிகர் சூப்பர் ஸ்டாருக்கு கோவில் அமைத்து அதில் உள்ள சிலைக்கு சிறப்பு யாகம் மற்றும் 8 வித வாசனை திரவியங்களால் விசேஷ பூஜை செய்தார். ரஜினியை தெய்வமாக கொண்டாடும் அவரது குடும்பத்தினருக்கு உலகம் முழுவதும பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
மதுரை திருமங்கலத்தில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர். இவர் தீவிர ரசிகர் என்றால் ரஜினி காந்த்துக்கு சிலை வைத்து அவரை தினமும் தெய்வமாக பிரார்த்தனை செய்து வரும் பரம ரசிகர். கார்த்திக் போலவே அவரின் குடும்பத்தினரும் ரஜினிகாந்த்தை தினமும் கும்பிட்டு அன்றைய நாளின் பணிகளையும் துவக்குகிறார்கள்.
ரஜினிகாந்த்தின் 74-வது பிறந்த நாள் 12.12.2024 அன்று உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்திக் தனது மனம் கவர்ந்த நடிகர் ரஜினிகாந்த்க்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயரமுள்ள கருங்கல் சிலையை அழகிய வண்ணக்கலவையில் அனைவரும் ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளார். இதனை அவர் தனது வீட்டின் ஒரு அறையில் வைத்துள்ளார். அந்த அறை “அருள் மிகு ரஜினி கோவில்” என அந்த அறை முழுவதும் ரஜினிகாந்த் நடித்த 171 படங்களின் விவரங்கள் பிரமாண்டமாக எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறையில் ரஜினிகாந்த்தின் 74-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழ் உள்பட 74 மொழிகளில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி அவரது தீவிர ரசிகர் கார்த்திக் ரஜினி நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என இன்று(11.12.2024) விசேஷ ஹோமம் நடத்தினார். இந்த ஹோமம் திருமங்கல கணேச குருக்களால் ரஜினி சிலைக்கு செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையின் போது ரஜினிகாந்த்தின் மூன்றரை அடி உயர ரஜினி சிலைக்கு பால், சந்தனம், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பூந்தி மற்றும் பூக்களைக் கொண்டு ரஜினி சிலைக்கு கார்த்திக் அபிஷேகம் செய்தார்.
பின்னர் குருக்களும் கார்த்திக்கும் சூப்பர் ஸ்டார் சிலைக்கு தீபாரதனை காட்டினர் . அப்போது அவரது குடும்பத்தினர் பயபக்தியுடன் கும்பிட்டார்கள்.
இது குறித்து முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்த்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டு தான் அவருக்கு எனது வீட்டிலேயே ஒரு அறையினை கோவிலாக அமைத்துள்ளேன்.
சென்ற ஆண்டு 3 அடி ரஜினிகாந்த் சிலையை அமைத்து தொடர்ந்து வழிபாடு நடத்தினோம். இந்த ஆண்டு மூன்றரை அடி உயரத்தில் மாப்பிள்ளை படம் கதா பாத்திரத்தில் ரஜினி சிலையை அமைத்துள்ளோம். எனது மனைவி ரோஹினி, மகள் அனுஷா, சகோதரர் சங்கர் அனைவரும் தீவிர ரஜினி ரசிகர்கள். அவர்களும் ரஜினி படத்தை தவிர வேறு எதனையும் விரும்பி பார்ப்பது இல்லை. ரஜினி தொடர்பான நிகழ்வுகளையும் நாங்கள் சிறப்பாக இந்த கோவிலில் கொண்டாடி வருகிறோம் என்றார்.
இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துக்கு கோவிலை வேறு எங்கும் யாரும் அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.