சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால் சென்னையில் மழைநீர் வடிகால்கள் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வால்டாக்ஸ் சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்ட்ரல் ஸ்டேசன், உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் வேலவன் நகர், கொளத்தூர் கோவில் தெரு பகுதிகளில் ஆய்வு செய்த பின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து கொளத்தூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மழை அவ்வப்போது பெய்து வருவதால் வேலைகள் தடைபட்டுள்ளது. அதிகபட்சம் அடுத்த ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என உறுதியளித்தார். மழைநீர் வடிகால் பணிகளில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.