இந்தியா என்பது ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு, ஒரே மதம் கிடையாது; அனைத்தும் கலந்ததுதான் இந்தியா என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;-
Bharat Mata is the voice of every Indian 🇮🇳 pic.twitter.com/7w1l7VJaEL
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023
“என்னுடைய வீடாக நான் நினைக்கும் இந்த நிலப்பரப்பில் கடந்த ஆண்டு 145 நாட்கள் நான் நடைபயணம் மேற்கொண்டேன். எதற்காக இந்த நடைபயணத்தை நீங்கள் மேற்கொண்டீர்கள்? இந்த பயணத்தில் எதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் மிகவும் நேசித்த ஒன்றைப் பற்றி முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நான் நேசித்தது மலைகளையா? கடல்களையா? ஒரு நபரையா? மக்களையா? அல்லது கொள்கைகளை நேசித்தேனா? என்று தெரிந்து கொள்ள எண்ணினேன்.
நடைபயணத்தை தொடங்கும்போது மிக எளிதாக இருக்கும் என்று நினைத்து தொடங்கினேன். ஆனால் சில நாட்களில் எனது முழங்காலில் நீண்ட நாட்களுக்கு முன்னால் ஏற்பட்ட காயத்தால் வலி அதிகமானது. எனது மருத்துவரும் எங்களுடன் வந்தார். ஒவ்வொரு முறை நான் நடைபயணத்தை நிறுத்தி விடலாம் என்று நினைக்கும்போதும், யாராவது ஒருவர் என்னிடம் வந்து எனது பயணத்தை தொடர்வதற்கான ஆற்றலை எனக்கு வழங்கினார்கள். அடர்ந்த காட்டில் இருக்கும் மின்மினிப் பூச்சிகளைப் போல, இந்த ஆற்றல் எங்கும் நிறைந்திருந்தது. எனக்கு தேவைப்பட்ட நேரத்தில் எனக்கு வழிகாட்டியாக அது அமைந்தது.
எனது நடைபயணம் தொடர்ந்து நடைபெற்றது. நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எனது முழங்கால் வலியை மறந்துவிட்டு மக்களோடு நடக்க ஆரம்பித்தேன். பிறர் கூறுவதை நன்றாக கவனித்துக் கேட்க தொடங்கினேன். ஒரு நாள் ஒரு விவசாயி என்னை சந்தித்துப் பேசினார். அவரது வயலில் அழுகிப் போன பயிர்களை என்னிடம் காட்டி கண்ணீர் சிந்தினார். அவரது குழந்தைகளை நினைத்து அவர் பயம் கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அவரிடம் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனது நடைபயணத்தை நிறுத்தி, அவரை கட்டியணைத்துக் கொண்டேன்.
இதே போன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடந்தன. குழந்தைகள், தாய்மார்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், கடைக்காரர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் இதே போல் என்னிடம் வந்து பேசினார்கள். என்னிடம் பேசும் நபரைத் தவிர வேறு எதிலும் எனது கவனம் செல்லவில்லை. தெருக்களில் யாசகம் பெற வற்புறுத்தப்பட்ட குழந்தைகள் குளிரில் நடுங்குவதைப் பார்த்த பிறகு, வெறும் டி-சர்ட் அணிந்து கொண்டு எனது முழு நடைபயணத்தையும் தொடர்வது என முடிவு செய்தேன். நான் நேசித்த பொருள் எது என்பது சட்டென எனக்கு விளங்கியது.
பாரத மாதா என்பது வெறும் நிலம் அல்ல. ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே வரலாறு கொண்டது அல்ல. மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஜாதிகளும் அல்ல. இந்தியா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியனின் பலமான அல்லது பலவீனமான குரல். அந்த குரல்களுக்குப் பின்னால் இருக்கும் மகிழ்ச்சி, பயம் மற்றும் வலி தான் இந்தியா. எனது சொந்த குரலையும், ஆசைகளையும், லட்சியங்களையும் அமைதியடையச் செய்த பிறகு தான் இந்தியாவின் குரலை என்னால் கேட்க முடிந்தது. அமைதியாகவும், பணிவாகவும் இருப்பவர்களால் மட்டுமே இந்தியாவின் குரலை கேட்க முடிகிறது. இது எவ்வளவு எளிமையானதாக இருந்துள்ளது. கடலில் கிடைக்கும் ஒரு பொருளை நான் ஆறுகளில் தேடிக் கொண்டிருந்தேன்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post