நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ம் ஆண்டு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.
அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, அவரிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று(மார்ச்.09) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 1,080 நாட்களாகியும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் ரூ.1 லட்சம் அபராதத்தை விதித்து, இதனை மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.