91 லட்சம் பண மோசடி செய்த தனியார் வங்கி மேனேஜர்..! போலீசில் சிக்கியது எப்படி..?
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஆசிரியர் நகர் அருகே லம்பாடி காலனியை சேர்ந்தவர் ஷகிலா பானு (வயது 30). இவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அயாத் நகரை சேர்ந்த முகமது ரபிக் (வயது 37). என்பவர், ஷகிலா பானுவிற்கு அறிமுகமானார்.
மேலும் முகமது ரபிக் தனியார் வங்கி மேனேஜர் தனக்கு நன்கு அறிமுகமானவர் எனவே அவர் மூலம் மகளிர் சுய உதவி குழுவிற்கு வங்கி கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். தொடர்ந்து ஒரு குழுவிற்கு 10 பேர் என்ற அடிப்படையில் 9 குழுவில் உள்ள 90 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி கடந்த ஓர் ஆண்டுக்கு முன் அவர்களிடம் இருந்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு செல்போன் நம்பர் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து ஆசிரியர் நகரில் உள்ள தனியார் வங்கி மேனேஜரான கோயம்புத்துாரை சேர்ந்த கவுதம் (வயது 33). இருவரும் சேர்ந்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் ஒருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்., என 90 உறுப்பினர்களுக்கு 90 லட்சத்தை தங்களது வங்கி கணக்கில் வரவைத்துக் கொண்டு, மகளிர் சுய ஊதவி குழு உறுப்பினர்களுக்கு தலா 10 ஆயிரம் என 90 பேருக்கு 9 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கி மீதம் 81 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த வாரம் குழு உறுப்பினர்களுக்கு வங்கியில் இருந்து ரூ.ஒரு லட்சத்துக்கான கடனை திருப்பி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த குழு உறுப்பினர்கள், தாங்கள் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கடன் பெற்றோம் என கூறி தனியார் வங்கியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து ஷகிலா பானு ஜோலார்பேட்டை போலீசில் புகாரளித்தார் அதன் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்ததில் வங்கி மேனேஜர் கவுதம் மற்றும் முகமது ரபிக் இருவரும் கூட்டு சேர்ந்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் ரூ.91 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
-லோகேஸ்வரி.வெ