“அகரம் அறக்கட்டளை 45வது ஆண்டுவிழா”
கல்வியாளர் வேதனை..!
திரைக்கலைஞரான சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தற்போது இதில் நடிகர் சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளையும்’ இணைந்து கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
45வது ஆண்டுவிழா:
அதன்படி, அறக்கட்டளையின் 45வது ஆண்டு விழா நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ மாணவிகளும் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி என மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தலா ரூ. 10,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்து மறுவாழ்வு முகாமில் தங்கி இருப்பவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, மூத்த ஓவியக் கலைஞர் மாயா (G.R மகாதேவன்) அவர்களின் பணிகளை பாராட்டி அவருக்கு ரூ. 1,00,000/ மற்றும பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வரும் திண்டிவனம் தாய் தமிழ் பள்ளிக்கு ரூ. 1,00,000/- வழங்கப்பட்டது.
மேலும் பின்தங்கிய கிராமங்களில் சிறப்பாகப் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
சூர்யா பேச்சு:
பரிசுகளைவழங்கிய பின் நடிகர் சூர்யா மேடையில் பேசினார். அதில் ”அகரம் அறக்கட்டளையின் மூலம் தற்போது வரை 6000 மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
அகரம் மூலம் படிக்கும் மாணவர்கள் சிறந்தவர்களாக இருப்பதால், நாங்களும் எவ்வித கூச்சமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் உதவி கேட்க முடிகிறது. 49 வயதில் நான் செய்த சாதனைகளை விட 17 வயதில் நீங்கள் செய்த சாதனை மிகப்பெரியது.
பள்ளி, கல்லூரி இரண்டிலும் நான் எதுவுமே சாதித்தது கிடையாது. ஆனால் நீங்கள் எந்த வசதியும் இல்லாமல் எதிர்நீச்சல் போட்டு வந்துள்ளீர்கள் என்றும் மேலும் கல்வி ஒரு ஆயுதம், கல்வி ஒரு கேடயம், அதனை சரியாக கற்றுக் கொள்ளுங்கள்”யாரலும் உங்களை வீழ்த்த முடியாது” என்று நடிகர் சூர்யா அறிவுறுத்தி உள்ளார்.
-பவானி கார்த்திக்