முதுமலை தெப்பக்காடு கிராமத்திற்கு பிரதமர் நேரடியாக வருவார் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை என பழங்குடியின யானை பாகன்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
கைகளை பிடித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் போட்டோ எடுத்து கொண்டதுடன் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக பெள்ளியம்மாள் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று காலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வாகன சவாரி மேற்கொண்ட பிறகு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட்டார்.
அப்போது பாமா என்ற பெண்யானைக்கு கரும்பு கொடுத்து அதன் தும்பிக்கையை தடவி கொடுத்த பிரதமர் மோடி பின்னர் 3 பழங்குடியின யானை பாகங்களிடம் யானைகள் பற்றியும், அவற்றை பராமரிப்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து T 23 புலியை உயிரோடு பிடிக்க பெரும் உதவியாக இருந்த தெப்பக்காடு பகுதியை சார்ந்த மூன்று பழங்குடியின வனத்துறை ஊழியர்களை சந்தித்து புலிகள் பிடித்தது குறித்தும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து அவர்களுக்கு கை கொடுத்து தோள்களைத் தட்டி பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி இறுதியாக பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் ரகு மற்றும் பொம்மி ஆகிய யானை குட்டிகளையும் பார்த்தவுடன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியதுடன் புகைபடங்களையும் எடுத்து கொண்டார்.
பிரதமர் மோடி தங்களது கிராமத்திற்கு வருவார் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை என்று கூறும் யானை பாகங்கள் தங்களை கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பழங்குடியின வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஆஸ்கர் ஆவணப்படுத்தி நடித்த பெள்ளியம்மாள் மற்றும் பொம்மன் தம்பதியினரை ஏன் டெல்லிக்கு வரவில்லை என்றும் கேட்டதாகவும் அவர்கள் டெல்லிக்கு செல்லாததால் அவர்களைத் தேடி தானே முதுமலைக்கு வந்ததாக பிரதமர் கூறியதாகவும் கட்டாயமாக தங்களை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்து சென்றதாகவும் பெள்ளியம்மாள் தெரிவித்தார்.
இதனிடையே தங்களது கிராமத்திற்கு வரும் பிரதமர் தங்களை சந்திப்பார் என்றும், கோரிக்கைகளை கேட்பார் என்றும் நினைத்ததாகவும் ஆனால் தங்களை சந்திக்காமலே பிரதமர் சென்றது வருத்தமளிப்பதாக தெப்பக்காடு கிராம பழங்குடியின மக்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.