சென்னை எம்.கே.பி நகரில், கர்ப்பிணி பெண், டேங்கில் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டார் சுவிட்சை போட முயன்ற போது மின்சாரம் தாக்கி, பலியான சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னை எம்.கே.பி நகர் 16,வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார். சரக்கு வாகன ஓட்டுநரான இவரது மனைவி இந்துமதி (25). 9 மாத கர்ப்பிணியான இந்துமதி நேற்று, வீட்டில் தண்ணீர் இல்லாததால் டேங்கில் தண்ணீரை நிரப்பி வைப்பதற்ஆக மின் மோட்டார் சுவிட்சினை போட சென்றுள்ளார்.
மின் மோட்டார் சுவிட்சை இந்துமதி தொட்டு இயக்கிய நிலையில், மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இந்துமதி மயங்கி விழுந்துள்ளார்.
இந்துமதியின் அலறல் சப்தம் கேட்டு, ஓடி வந்த உறவினர்கள், உடனடியாக இந்துமதியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு இந்துமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து எம்.கே.பி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.