அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா். உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியா், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளாா்.
இதையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு, குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஜா்பைஜானில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகத்துக்கு குடுமப்த்துடன் சென்ற பிரக்ஞானந்தா, வெள்ளிப் பதக்கத்தை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், தமிழக அரசு தரப்பில் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை காசோலையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வின்போது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.