ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலையை வலம் வந்து பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம் . இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது.
இதை தொடர்ந்து புரட்டாசி மாத பௌர்ணமி தினமான நாளை (ஞாயிறு) கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து கிரிவலம் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவல பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.