கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கு இளைஞர்கள் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், வறுமை நிலையில் உள்ள பெண்களை குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.
இந்த வழக்கில் திருநாவுக்கரசின் ஐபோனில் இருந்த சுமார் நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் முக்கிய ஆதாரமாக கைப்பற்றப்பட்டது. ‘அண்ணா பெல்ட்டால அடிக்காதிங்கண்ணா’ என்ற ஒரு பெண்ணின் மரண ஓலம் தமிழகத்தையே அலற வைத்தது.
சி.பி.ஐ., விசாரணை நடத்திய இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹெரன்பால், அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, 2019ம் ஆண்டு மே மாதத்தில் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகதாக்கல் செய்தனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு ‘இன்கேமரா’ முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு அளித்தார்.
இதற்காக, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கட்டளல். கோவை நீதிமன்ற பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். மேலும், இந்த குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
















