மோடி மீது குறையும் மக்களின் நம்பிக்கை..! இடைத்தேர்தல் வெற்றி குறித்து கார்கே கருத்து..!
வெறுப்பு அரசியலை பொதுமக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளதை இந்த இடைத்தேர்தல் வெற்றி காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி 10 இடங்களில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் பா.ஜனதா 2-தொகுதிகளிலும், பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங்கும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “சட்டசபை இடைத்தேர்தலின் சாதகமான முடிவுகளுக்காக பொதுமக்கள் அனைவரின் முன் தலைவணங்குகிறோம். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பாதகமான சூழ்நிலைகளில் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம். பா.ஜனதாவின் ஆணவத்தையும், தவறான நிர்வாகத்தையும், எதிர்மறை அரசியலையும் பொதுமக்கள் தற்போது முற்றாக நிராகரித்துள்ளதையே இந்த வெற்றி காட்டுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி-அமித் ஷாவின் அரசியல் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மை குறைந்து வருவதற்கு இந்த வெற்றிகள் வலுவான சான்றாகும்” என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி தனது வலைதளத்தில்., “ஏழு மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேவபூமி இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 100 வருடங்கள் பின்னோக்கி.. 100 வருடங்கள் முன்னோக்கி திசை திருப்பும் அரசியலால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
நிகழ்காலத்தை மேம்படுத்தும் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான தெளிவான வரைபடத்தைத் தயாரிக்கும் நேர்மறையான அரசியலை மக்கள் விரும்புகிறார்கள். இளம் இந்தியாவின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று அதில் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..