தற்காலிக சபாநாயகராக ஒடிசாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம்..! இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?
ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவை தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்துள்ளதாக நாடாளுமன்ற அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 95ன் கீழ் ஒடிசா மாநிலம் கட்டாக்கை சேர்ந்த பர்த்ருஹரி மஹதாப் மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளதாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரானது ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பும் நடைபெறவுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பார்கள்.
அவருக்கு காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ், திமுக தலைவர் டி.ஆர்.பாலு, பாஜக உறுப்பினர்கள் ராதா மோகன் சிங் மற்றும் பக்கன் சிங் குலாஸ்தே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் உதவியாளராக பணி புரிவார்கள் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு நடைபெறும்.
தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹதாப். பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு முறை எம்பியாக இருந்த பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிஜூ ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.
17வது மக்களவையில் ஓம் பிர்லா சபாநாயகராக பதவி வகித்தார். இந்நிலையில், 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகர் பொறுப்பு ஏற்கிறார். ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரும் இந்த பதவியை கேட்டது குறிப்பிடதக்கது.
இதனிடையே மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சபாநாயகர் தேர்வு குறித்து கூட்டணி கட்சிகளிடையே ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், அதேநேரம் தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் இந்தியா கூட்டணி சார்பில் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ