பதள சாக்கடை.. விஷவாயு தாக்கியதில் இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்..!
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த ஜேபி எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இருந்ததை சரி செய்யும் பணியில் ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நான்கு நபர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் பணியில் ஆவடி அருந்ததிபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (25) பாதாள சாக்கடைக்குள் இறங்கி சரி செய்து கொண்டிருக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு மேலே ஏறும்பொழுது அவரால் ஏற முடியாமல் விஷ வாய்வு தாக்கி பாதாள சாக்கடைக்குள் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் மயங்கி விழுந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ஆவடி போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்