“திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை.. பொதுமக்கள் எதிர்ப்பு எடுக்கப்பட்ட ஆக்ஷன்..”
மயிலாடுதுறை அருகே மணல்மேடு கடைவீதியில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடை பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றின் ஓரம், சுடுகாடு பகுதி போன்ற இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு திறந்தது. தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
பொதுமக்களின் எதிர்ப்பால் ஒருசில கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டது. மணல்மேடு கடைவீதியில் மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள் மல்லியக்கொள்ளை, ஆத்தூர், பட்டவர்த்தி சுடுகாடு பகுதிகளில் திறக்க்ப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மணல்மேடு கடைவீதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடை பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பால் மூடப்பட்ட நிலையில் இன்று மணல்மேடு கடைவீதியில் மீண்டும் டாஸ்மாக்கடையை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் திறந்தனர்.
பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்லும் வழியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏராளமான குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனையறிந்த பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட கடைவிதியில் திரண்டனர்.
தொடர்ந்து மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து கடை மூடப்பட்டது. மணல்மேடு கடைவீதியில் டாஸ்மாக் கடை திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..