யாரும் வற்புறுத்தக் கூடாது.. போராடும் ஆசிரியர்கள்.. திடீரென வந்த எச்சரிக்கை..!
வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு, எந்தவொரு ஆசிரியரையும், போராட்டக் குழு வற்புறுத்தக் கூடாது என்று கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், அரசாணை 243-ஐ ரத்து செய்தல், சம அளவிலான வேலைக்கு சம அளவிலான ஊதிய வழங்குதல் உள்ளிட்ட 31 கோரிக்கைகைளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தில், 1 லட்சம் ஆசிரியர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று அந்த அமைப்பு கூறியிருந்தது.
இந்நிலையில், அந்த குழு அறிவித்ததை போல, இன்று அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு, எந்தவொரு ஆசிரியரையும், போராட்டக் குழு வற்புறுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு யாராவது வற்புறுத்தினால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.