சென்னையில் இனிமேல் 2 இல்ல.. மொத்தமாக 3 ரயில் முனையம்.. எங்கே தெரியுமா?
சென்னை மாதிரியான மாநகரங்களில், பேருந்து, தனிநபர் போக்குவரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவுக்கு ரயில் போக்குவரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இந்த ரயில் போக்குவரத்தை நம்பி தான், பல்லாயிரக்கணக்கான பயணிகள், தங்களது அன்றாட பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தமாக, 2 முக்கிய ரயில் முனையங்கள் உள்ளது. அதில் ஒன்று சென்னை செண்டரல், மற்றொன்று எழும்பூர் ரயில் நிலையம். தற்போது, இந்த ரயில் முனையங்களின் எண்ணிக்கையை 3-ஆக மாற்ற, தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. அதாவது, சென்னையின் நுழைவு வாயிலாக இருக்கக் கூடிய தாம்பரம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை, சர்வதேச தரத்தில் ரயில் முனையமாக மாற்ற உள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
அதாவது, தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது 8 நடைமேடைகள் உள்ளன. முதல் இரு நடைமேடைகள் தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில்களை இயக்கவும், 3, 4 நடைமேடைகள் செங்கல்பட்டு மாா்க்கமாகச் செல்லும் மின்சார ரயில்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
மீதமுள்ள நடைமேடைகள் விரைவு மற்றும் சரக்கு ரயில்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இனிவரும் காலங்களில் தேவையைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை மற்றும் இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தாம்பரம் பணிமனையில் ரயில்களைப் பராமரிக்கவும், ரயில்களின் சீரான இயக்கத்துக்கு வழிவகை செய்யவும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் மூலம் தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயனடைகின்றனா். கடந்த இரு வாரங்களாக மின்சார ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
ஆக.15 முதல் ஆக.18-ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும், தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளதால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
-பவானி கார்த்திக்