இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகை அடமானம் தொடர்பாக 9 புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக புதிய நடைமுறை என தெரிவித்த போதிலும் அவசர கடன் தேவைகளுக்கு தங்க நகையினை நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை இந்த விதிகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
குறிப்பாக அடமானம் வைக்கும் நகைகளுக்கு ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது பரம்பரை மற்றும் பழைய நகைகளுக்கு சாத்தியம் இல்லாதது.அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பை முன்பைவிட 5% குறைத்து 75% தான் கடன் வழங்கப்படும் என்றும் புதிய விதியில் சொல்லப்பட்டுள்ளது. இதனால், கடன் வாங்குபவர்கள் தனியார் அடகு கடையினை நாடுவார்கள். வட்டி கூடுதலாக செலுத்தவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பின்பே அதே நகைகளை மீண்டும் அடமானம் வைக்க முடியும். முன்பு வட்டியை மட்டும் செலுத்தி கடனை நீட்டிக்க முடியும் என்ற நடைமுறை இருந்தது. இப்போது முழுத்தொகையினையும் செலுத்த வேண்டும். இது கடன் வாங்குவோருக்கு கூடுதல் நிதி சுமையினை ஏற்படுத்தும். இப்படி, பல விதிமுறைகள் சாமானிய மக்கள் நகை கடனுக்காக வங்கிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்களின் நிலையை பற்றி சிந்திக்காமல் , பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாதவாறு புதிய விதிமுறைகளை நடைமுறைபடுத்துவது ஏற்புடையதா? என்றால் நிச்சயமாக இல்லை. சிறு குறு தொழில்கள் நலிவடைந்து உள்ள நிலையில் , தங்க நகை கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களால் கூடுதல் வட்டிக்கு தனிநபர்களிடம் இருந்து கடன் வாங்கும் நிலையே ஏழை மக்களுக்கு ஏற்படும்.
மக்கள் நலனை பற்றியோ, அவர்கள் நிலையை மேம்படுத்துவது பற்றியோ சிறிதும் சிந்திக்காமல் அறிவிக்கப்படும் இத்தகைய விதிமுறைகள் அரசின் மக்கள் விரோதப்போக்கினையும், பெருநிறுவன வளர்ச்சிக்கான ஆதரவையுமே காட்டுகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வாலும், பொருளாதார பின்னடைவாலும் பாதிக்கப்பட்டுள்ள விளிம்புநிலை மக்களை மேலும் வாட்டி வதைக்கும் இத்தகைய கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்ப பெறுவதே நாட்டு மக்களுக்கு செய்யும் நன்மை ஆகும்.