இரண்டாவது நாளாக நடைப்பெறும் முத்தமிழ் முருகன் மாநாடு… திரண்டு வரும் பக்தர்கள்…!
பழனி தமிழ்க் கடவுள் முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாகத் துவக்கி வைத்தார். மாநாடு சிறப்பு மலரை அமைச்சர் பெரியசாமி வெளியிட நீதிபதி சுப்ரமணியன் பெற்றுகொண்டார்.
இந்த நிலையில், இன்று 2ம் நாளாக (ஆக.25) மாநாடு பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாநாடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்றும் அதே அளவு கூட்டம் படையெடுத்து வருகிறது. அதனைதொடர்ந்து இன்று ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கருத்தரங்கம், பட்டிமன்றம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இன்று அருணகிரிநாதர் அரங்கில் நடைபெறுகிறது.
மேலும், அறுபடை முருகனை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை முருகனின் வரலாற்று கதைகளை கூறும் வகையில், அமைந்துள்ள படங்களையும், 3டி தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள திரைப்படத்தையும், முருகனை அருகில் இருந்து காணும் வகையில் உள்ள விஆர் கண்காட்சியையும் பார்வையிட இன்று பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இன்றும் வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஆதீனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பிரசாதம் பைகளும், அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பக்தர்களுக்குக் காலை உணவு, மதியம் உணவு என தடபுடலாக வழங்கவும், மக்கள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிடும் வகையில் வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்