சின்னத்திரை நடிகர் அர்னவ் தன்னை கொடுமைபடுத்துவதாக சின்னத்திரை நடிகை திவ்யா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு, கர்ப்பமாக இருக்கும் தன்னை கீழே தள்ளியதால், கரு கலைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து திவ்யா அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னாவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை பெற்று கொண்ட நிலையில் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து கடந்த வாரம் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் போலீசார் அர்னவை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் படி அர்னவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அம்பத்தூர் சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் பரம்வீர் முன்னிலையில் இன்று நடிகர் அர்னவ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு பின்பு முன்ஜாமின் மனுவை நிராகரித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.