தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் கடந்த 16-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை(மார்ச்.19) தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும்.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து, நாளை மறுதினம்(மார்ச்.20) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த நாள்(மார்ச்.21) புயலாகவும் வலுப்பெறும் என்றும், வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் மார்ச்.22-ந்தேதி நிலைபெறும்.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நாளை(மார்ச்.19) முதல் மார்ச்.21 ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு பெய்யக்கூடும்,
அதன்படி, இன்று(மார்ச்.18) டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ,கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை(மார்ச்.19) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி ,திருநெல்வேலி, ஈரோடு ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,சேலம் ,நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மார்ச். 20 முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலையாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.