தமிழக அரசின் பட்ஜெட் உரையின்போது அதிமுகவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்கிண்டல் அடித்தார்.
தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறையின் மேம்பாட்டுக்கும் பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசலாம் என்று சபாநாயகர் கூறியும், அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்களுக்கு பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வலுப்படுத்தப்படும். நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், “ஒருவேளை எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் அமர்ந்திருந்தால், ஊழல் தடுப்புத்துறை வலுப்படுத்தப்படும் என்ற இந்த அறிவிப்பை கேட்டபிறகு வெளிநடப்பு செய்திருப்பார்களோ.. என்னவோ” என கிண்டலாகப் பேசினார்.