முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ‘பகிரங்க மன்னிப்பு, ரூ.100 கோடி நஷ்ட ஈடு’ கேட்டு தி.மு.க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சமீபத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதும் துபாய்க்குத் தனியே செல்லவில்லை. அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, ரூ.5 ஆயிரம் கோடி அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்து வைக்க எதற்கு அவ்வளவு பணம்? என்று காட்டமான கேள்வியுடன் விமர்சித்தார். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமால் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதலமைச்சரிடம் ‘பகிரங்க மன்னிப்பு, ரூ.100 கோடி நஷ்ட ஈடு’ கேட்டு தி.மு.க. சார்பில் இன்று அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீசில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.
முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.
இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.