புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி துபாயில் உலக கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன, அதன்படி மார்ச் 25 முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சர்வதேச முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்.
இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கை நேற்று(மார்ச்.26) திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயில் உள்ள இரண்டாயிரத்து 217 அடி உயரம் கொண்ட உலகின் அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் விளக்கும் வகையில் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.