காயத்ரி ரகுராமை கட்சியில் சேர்ப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறி கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் சார்பில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் நேற்று அறிவித்தார். அத்துடன், தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன், எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன் என்று அறிவித்தார். தன்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் ஒளி அறக்கட்டளை துவக்க விழாவை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடியிடம் காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சர், பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப் படுவார்கள் எனவும் காயத்ரி ரகுராமுக்கும் அதேதான் என தெரிவித்த அமைச்சர் தங்கள் கொள்கைகளை பின்பற்றுவோரை திமுக தலைமை ஏற்றுக்கொள்ளும் தங்கள் முதல்வரும் ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post