மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால், 8 வயசு சிறுவன் உயிரிழந்தாக கூறி மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பாதி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ஹரிஷ் கடந்த 30- ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுவன் விஷக்கடியால் பாதிக்ப்பட்டுள்ளதாக உறவினர்கள் மருத்துவரிடம் தெரிவித்ததாகவும், ஆனால், மருத்துவர்கள் போதை பொருள் அல்லது சிறுவன் சாப்பிட்ட உணவு காரணமாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறி சாதாரண வார்டுக்கு மாற்ற சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உடலில் முன்னேற்றம் ஏற்படாததால் டிசம்பர் 31-ஆம் தேதி திருவாரூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருவாரூர் மருத்துவமனையில், சிறுவனை பாம்பு கடித்து விஷம் உடல் முழுவதும் பரவி உள்ளதாக கூறிய மருத்துவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரிஷ் இறந்துள்ளார். இதையடுத்து சிறுவன் ஹரிஷ் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்ட நிலையில், அமரர் ஊர்தி நிறுத்தி, மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. .
Discussion about this post