மீண்டும் சென்னைக்கு வரும் மினி பேருந்து..! இந்த பகுதிகளில் மட்டுமே இயக்கப்படும்..! தமிழக அரசு அறிவிப்பு..!
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கும், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவும் தற்போது தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது..
அந்த வகையில் தமிழ்நாட்டில் மீண்டும் மினி பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயங்குவதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், மற்றும் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி சேவை வழித்தடம் வழங்கப்பட மாட்டாது எனவும். அதே சமயம் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மினி பஸ் சேவை வழங்கப்பட உள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்படும் என்பதை, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO) மட்டுமே முடிவு செய்து, அதற்கான அனுமதியை வழங்குவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 25 கி.மீ., தூரம் வரை மினி பஸ்களை இயக்கவும், இதில் 18 கி.மீ., தொலைவுக்கு சேவை இல்லாத வழித்தடங்களிலும், 8 கி.மீ., தொலைவுக்கு ஏற்கனவே சேவை உள்ள வழித்தடங்களிலும் அனுமதி வழங்கப்படும் எனவும் வரைவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தவிர்த்து ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் வரை பயணம் செய்ய முடியும்.., அதற்கான சீட்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து மினி பேருந்துகளிலும், ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டிருப்பதால் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த மினி பஸ் வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இதன்படி ஜூலை 14ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
– லோகேஸ்வரி.வெ