மெட்ரோ ரயில் பணிகள்.. இடிக்கப்பட இருந்த பழைமை வாய்ந்த கோவில்கள்.. சூப்பர் ஐடியா சொன்ன நீதிபதி..
சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில், நீல வழித்தடமும், சென்னை செண்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை பச்சை வழித்தடமும் இயங்கி வருகிறது.
இந்த மெட்ரோ ரயில்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், தற்போது இதன் 2-ஆம் கட்ட பணிகள், நடந்து வருகிறது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள், புதிதாக திறக்கப்பட உள்ள பரந்தூர் விமான நிலையம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் கோபுரங்கள் மற்றும் அங்குள்ள ராஜகோபுரத்தை இடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகள் பூமிக்கு அடியில் 30 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு நடைபெறுகிறது. அப்போது துர்க்கை அம்மன், ஸ்ரீரத்தின விநாயகர் கோயிலின் ராஜகோபுரம் நிச்சயமாக பாதிக்கும்.
எனவே ராஜகோபுரத்தை நவீன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 5 மீட்டர் தூரத்திற்கு உள்புறமாக நகர்த்தி வைத்துவிட்டு பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடலாம். ரத்தின விநாயகர் கோயிலை இடிக்க நேர்ந்தால் பாலாலயம் நடத்தி அப்புறப்படுத்திவிட்டு பணி முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் அமைத்துவிடலாம்.
ஆனால் இந்த இரு கோயில்களுக்கும் எல்லா பணிகளும் முடிந்தவுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும். மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளை கோயில்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் அருகில் உள்ள காலியிடத்திற்கு மாற்ற வேண்டும்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி மீண்டும் கோயிலுக்கு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளதால் அதுகுறித்தும் மெட்ரோ நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
-பவானி கார்த்திக்