பழம்பெரும் மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னசென்ட் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 75.
1972 ஆம் ஆண்டு “நிருதாசாலா” என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள திரையுலகில் நடித்து வந்த இன்னசென்ட், அக்கரே நின்னொரு மாறன், காந்திநகர் 2வது தெரு, உன்னிகளே ஒரு கதை பாராயம், நாடோடிக்கட்டு, முகுந்தெட்ட சுமித்ரா விளக்கு, வடக்குநோக்கியந்திரம், ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் உள்ளிட்ட 750 க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இன்னசென்ட், 2015 ஆம் ஆண்டு முதல் அதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடிக்கத்தொடங்கினார். இந்நிலையில் மார்ச் 3ம்தேதி சுவாசப்பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள லேகேஷார் மருத்துவமனையில் இன்னசென்ட் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உறுப்பு செயலிழப்பு, மூச்சுத்திணறல், போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்னசென்ட் கடைசியாக கடந்த ஆண்டு திரைக்கு வந்த பிருத்விராஜ் நடித்த கடுவா படத்தில் நடித்தார். ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘பாசுவும் ஆல்புத்தவிளக்கும்’ இவரது கடைசி திரைப்படமாகும்.
Discussion about this post