மகாவிஷ்ணு வழக்கு.. அறிக்கைகளை தாக்கல் செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு..!
விசாரணை தொடர்பான அறிக்கையை தயார் செய்து நாளை பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள போவதாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மோடிவேஷன் அளிக்கும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகவும் வருகை தந்த பரம்பொருள் என்ற அறக்கட்டளையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மனம் வருந்தும் வண்ணம் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் இவர் மீது மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த செப்.7 ஆம் தேதி விமான நிலையத்தில் வைத்து தலைமறைவாகியிருந்த மகாவிஷ்ணுவை கைது செய்தனர்.
பின்னர் காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு தங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தது.
இதனைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல், தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடமும் இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த அறிக்கையை தயார் செய்து நாளை பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.