சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்கும் தமிழக அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த சிறப்பு உரிமம், உரிமம் பெற்றவர் மற்றும் உரிமைதாரரால் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது.
இந்த சிறப்பு உரிமத்தை எதிர்த்து சமூக நீதி பேரவை தலைவரும், வழக்கறிஞருமான பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனது மனுவில், “டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் தான் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இந்தநிலையில், திருமணம் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் என்பதால், இந்த விதிகளை அனுமதித்தால், அது பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருத்த விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பொது இடங்களான திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாறும் விதி ரத்து செய்யப்பட்டு தற்போது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு மைதானங்களில் மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை எதிர்த்து மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பொது இடங்கள் மட்டுமின்றி சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாற தடை விதிக்க வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததாகவும், கூடுதல் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் தேவை என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது பரிமாற தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.