தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் க/பெ ரணசிங்கம், டிரைவர் ஜமுனா, கனா ஆகிய படங்களைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான ஃபர்ஹானா-வில் நடித்துள்ளார். இந்த படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் முஸ்லிம் பெண் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், ஃபர்ஹானா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என முஸ்லீம் அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளது.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத கட்டுப்பாடுகளையும் மீறி வேலைக்குச் செல்லும் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா அப்துல் ரஹீம் புகார் ஒன்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஃபர்ஹானா திரைப்படத்தின் டீசர் காட்சியில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய பண்பாட்டு, கலாச்சாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஃபர்கானா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.